தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
உலக புகழ் பெற்ற பன்மொழி ஓலைச்சுவடிகள் நிறைந்த நூலகமான தஞ்சை சரசுவதிமகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ச்சுவடியியல் பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு அடுத்தமாதம் (ஜூலை) 8-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 3 வார காலத்திற்கு தமிழ் ஓலைச்சுவடிகளை படித்தறியும் விதமாக தமிழ்ச்சுவடியியல் பயிற்சி வகுப்பு நடக்கிறது. பதிப்பிக்கப்படாத தமிழ்ச்சுவடிகளை பதிப்பிக்கவும், பதிப்பிக்க பெற்ற நூல்களை மீளாய்வு செய்து புதிய கருத்துக்களை வெளி கொண்டு வருவது தான் இந்த பயிற்சியின் நோக்கம். பனை ஓலைகளில் எழுதுவதற்கு பயிற்சி வழங்க உள்ளோம். பயிற்சி பெறும் மாணவர்களுக்குரிய பாடநூல், எழுது பொருட்கள் போன்றவையும் வழங்கப்படும்.
தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களும், சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்களும், ஜோதிடவியலில் பட்டம் பெற்றவர்களும் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சியில் சேர தேர்வு பெற்றவர்கள் ரூ.100 மட்டும் பதிவு கட்டணமாக பயிற்சி தொடங்கும் நாளில் செலுத்த வேண்டும். பயிற்சி வகுப்பு நாள்தோறும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை நூலகத்தின் வேலை நாட்களில் வந்து பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் உறையின் மேல் தமிழ்ச்சுவடியியல் பயிற்சி வகுப்பு என்று குறிப்பிட்டு இயக்குனர், சரசுவதிமகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சை-613009 என்ற முகவரிக்கு வருகிற 5-ந் தேதிக்குள் நூலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரம் பெற 04362-234107 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.