பேராவூரணி அரசு மருத்துவமனையில் செவிலியர், மருந்துசீட்டு கொடுக்கும் பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி ஒன்றியக்குழு கூட்டம் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் திருஞானம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் காசிநாதன் வரவேற்றார்.
கூட்டத்தில், பேராவூரணி அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர், துப்புரவு பணியாளர், மருந்து சீட்டு கொடுக்கும் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. உயிர் காக்கும் மருந்துகள் எக்ஸ் ரே கருவிகள் இல்லை. மருத்துவர் பற்றாக்குறையும் உள்ளது.
இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தஞ்சை மாவட்ட கலெக்டர் உடனடியாக மேற்கண்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கேட்டுக்கொள்வது.
பேராவூரணி நகரின் மையப்பகுதியில் செல்லும் ஆனந்தவள்ளி வாய்க்கால் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கு பயன்படுகிறது. மேற்கண்ட வாய்க்காலில் கழிவுநீர் கலந்து சுகாதார கேடுவிளைவிக்கும், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனந்தவள்ளி வாய்க்காலை முழுமையாக தூர்வாரி விவசாய பாசனத்திற்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்வது, தமிழக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஏரி, குளம் சாலையோரம் உள்ள வீட்டுமனைகளில் பட்டா இல்லாமல் குடியிருப்போரை வெளியேற்றப்போவதாக தெரிய வருகிறது.
மேற்படி இடங்களில் குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்கி அவர்களை குடியமர்த்திவிட்டு அதற்கு பின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.