புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 12 லட்சத்து 44 ஆயிரத்து 769 பேர் வாக்களிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திங்கள்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 225 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டுகள், 497 கிராம ஊராட்சித் தலைவர்கள், 3807 கிராம ஊராட்சி வார்டுகள், 69 நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் 120 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஆண்கள் 6,19,884, பெண்கள் 6,24,867, இதரர் 18 என மொத்தமாக 12 லட்சத்து 44 ஆயிரத்து 769 வாக்காளர்கள் உள்ளனர்.ஊரகப் பகுதிகளுக்கு 2253, நகராட்சிப் பகுதிக்கு 152, பேரூராட்சிப் பகுதிக்கு 121 என வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
39 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 680 தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் மற்றும் 17495 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அன்னவாசல், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில், புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கும், அன்னவாசல், இலுப்பூர், கறம்பக்குடி, கீரனூர் ஆகிய பேரூராட்சிகள், புதுக்கோட்டை நகராட்சி ஆகிய பகுதிகளுக்கு 17.10.2016 அன்றும், அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம், திருவரங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், அரிமளம், ஆலங்குடி, கீரமங்கலம் ஆகிய பேரூராட்சிகள், அறந்தாங்கி நகராட்சி ஆகிய பகுதிகளுக்கு 19.10.2016 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றார்.