தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19-ல் நடைபெறும்: தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவிப்பு.

Unknown
0


தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இத்தகவலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான நேரடித் தேர்தல்கள் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 91,098 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனுக்கள் நாளை (26.09.2016) முதல் பெறப்படும். நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும்.

வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதி. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அக்டோபர் 4-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 6-ம் தேதியே கடைசி.

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ல் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. உள்ளாட்சித் தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நேரடி தேர்தல் அனைத்தையும் அக்டோபர் 26-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 5.8 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தல் பணிகளை பார்வையிட 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

நேரடித் தேர்தலுக்குப் பின்னர் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் என 13,362 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 2-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top