தமிழகத்துக்கு செப்.21முதல் 10 நாட்களுக்கு 3,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி மேற்பார்வைக்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் பங்கேற்றார். கர்நாடக, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
முன்னதாக, காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம் - கர்நாடகா இடையே பிரச்சினை நீடித்து வந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, செப்டம்பர் 17-ம் தேதி வரை 15,000 கன அடி நீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்து விட வேண்டும். கடந்த 7-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
17-ம் தேதியுடன் நீர் திறப்புக் காலம் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நாள்தோறும் 12 ஆயிரம் கன அடி நீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர், தண்ணீரை திறந்துவிடுவது பற்றி காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேற்பார்வை குழு செயல்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதே நாளில் கூடிய காவிரி மேற்பார்வைக் குழு காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து எந்த முடிவும் அறிவிக்கவில்லை.
எனினும் 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து தற்போது வரையிலான 9 ஆண்டுகளில் பெய்த மழையின் அளவு, அந்த ஆண்டுகளில் அணைகளில் இருந்த தண்ணீரின் அளவு, பயன்படுத்தப்பட்ட தண்ணீரின் அளவு உள்ளிட்ட அனைத்து புள்ளி விவரங்களையும் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 29 ஆண்டுகளில் மழைப் பொழிவு, அணைகளில் நீர் இருப்பு, பற்றாக்குறை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை கர்நாடக அரசும் தமிழக அரசும் அளித்துள்ளன. இந்த புள்ளிவிவரங்களை மேற்பார்வைக் குழு ஆய்வு செய்தது. இதன் அடிப்படையில் காவிரி மேற்பார்வைக் குழு நான்கு மாநிலங்களும் தாக்கல் செய்த புள்ளி விவரங்கள் குறித்து இன்று ஆய்வு செய்தது.
அதற்குப் பிறகு, இன்று தமிழகத்துக்கு கர்நாடக அரசு செப்.21முதல் 10 நாட்களுக்கு 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக காவிரி மேற்பார்வைக் குழு தலைவரும், மத்திய நீர்வளத் துறை செயலாளருமான சசி சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''காவிரியிலிருந்து நீர் திறக்க உத்தரவிடும் அதிகாரம் காவிரி மேற்பார்வைக் குழுவுக்கு உள்ளது.கடந்த 15 நாட்களில் வந்த நீர் வரத்தை முன்னிறுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பின்படியே காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ளது.
நீர்இருப்பு, நீர்வரத்து குறித்து அறிந்துகொள்ளும் புதிய முறை தேவை. ஆன்லைனில் தகவல்களைத் தெரிந்துகொள்ள 2 ஆண்டுகள் தேவைப்படும். நீர் திறப்பு, நீர்வரத்து குறித்து ஆன்லைனில் தெரிந்துகொள்ள நடவடிக்கை தேவை'' என்று சசி சேகர் கூறினார்.
விவசாயிகள் சங்கம் அதிருப்தி
காவிரி மேற்பார்வைக் குழுவின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. 3,000 கன அடி நீர் என்பது மிகவும் குறைவு. குடிநீருக்கு மட்டும்தான் பயன்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.