பேராவூரணி அடுத்து குருவிக்கரம்பையில் 4 ஆண்டுகளாக திறக்கப்படாமல் புதர் மண்டி கிடக்கும் சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்தை உடனே திறந்து மருத்துவரையும் நியமிக்க வேண்டு மென மாவட்ட கலெக்டருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் அழகியநாயகிபுரம், குருவிக்கரம்பை, பெருமகளூர், ஊமத்தநாடு ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதில் குரு விக்கரம் பையில் செயல் பட்டு வரும் சுகாதார நிலையத்திற்கு கஞ்சங்காடு, குறவன் கொல்லை, சாந்தாம் பேட்டை, நாடியம், மருங்கப்பள்ளம், முனுமாக்காடு, குண்டாமரைக்காடு, கள்ளங்காடு, கங்காதரபுரம், பாலச்சேரிக்காடு ஆகிய பகுதிகளிலிருந்து தினமும் 500 பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இந்த சுகாதார நிலையத்தில் பொது மருத்துவ பிரிவும், சித்த மருத்துவ பிரிவும் ஒரே கட்டிடத்தில் இயங்கிவந்தது. இரண்டு பிரிவுகளிலும் மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர்.
போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் குருவிக்கரம்பை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் அருகிலேயே சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் சித்தமருத்துவப்பிரிவிற்கு கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடம் கட்டி முடிப்பதற்குள்ளாகவே சித்த மருத்துவ பிரிவு மருத்துவர் பணியிட மாறுதலில் சென்று விட்டார். இதனால் சித்த மருத்துவப்பிரிவுக் கென கட்டப் பட்ட கட்டிடம் 4 ஆண்டுகளாக திறக்கப் படாமல் புதர்மண்டிக்கிடக்கிறது. மருத்துவரும் இது நாள் வரை நியமிக்கப்படவில்லை. இம் மருத்துவகட்டிடத்தை திறக்க வேண்டும், புதிதாக சித்த மருத்துவர் நியமிக்கப்பட வேண்டு மென குருவிக்கரம்பை ஊராட்சி சார்பிலும், சுற்றுவட்டார பொது மக்கள் சார்பிலும் தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் டெங்கு காய்ச்சல், சிக்குன்குன்யா போன்ற பல வித நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இந்த சித்த மருத்துவ கட்டிடத்தை திறந்து மருத்துவரை நியமிக்க வேண்டு மெனபொது மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.