பேராவூரணியில் பலத்த சூறைக்காற்றால் சாலையோர மரம் முறிந்து விழுந்தது. இதில் மரத்தின் பாரம் தாங்காமல், அடுத்தடுத்து உள்ள 5 மின்கம்பங்கள் கீழே சாய்ந்தன. இரவு நேரமாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பேராவூரணி சேதுசாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக்கு முன்பாக சாலையோரம், நூற்றாண்டு பழமை வாய்ந்த வாகை மரம் உள்ளது. இப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.
புதன்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில், அண்மையில் பெய்த மழையினால் ஊறி, உள்ளுக்குள் கூடு பாய்ந்த நிலையில் இருந்த வாகை மரம் இரண்டாக முறிந்து, அதன் ஒரு பகுதி மரத்தின் கீழ் சென்று கொண்டிருந்த மின் வயரில் விழுந்தது. இதில் அருகில் இருந்த புளியமரத்தின் கிளையும் முறிந்து சாய, பாரம் தாங்காமல் அருகில் இருந்த மின்கம்பம் தரையில் சாய்ந்தது.
அதனை தொடர்ந்து அடுத்தடுத்து 200 மீட்டர் தூரத்தில் இருந்த 5 மின்கம்பங்களும் கீழே சாய்ந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மின்சார வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு மின்வாரிய உதவி மின்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் விரைந்து வந்து முறிந்த மரம் மற்றும் மின்கம்பங்களை சீர் செய்தனர்.பகலில் இம்மரத்தின் அடியில் தரைக்கடை போட்டு வியாபாரம் செய்பவர்கள், விடுதிக்கு செல்லும் மாணவியர்கள், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்கள் என இந்த பகுதி பரபரப்புடன் காணப்படும். இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.