காவிரி நதிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு, திமுக மாநிலங்களவை உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி வேண்டுகோள் விடுத்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். காவிரி நதிநீர் பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. தண்ணீர் பிரச்னையை மக்கள் பிரச்னையாக்கி வருகின்றனர். அமைதி ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். எதிர்க்கட்சி துணைத்தலைவரும், திமுக முதன்மை அமைப்புச் செயலாளருமான துரைமுருகன் கூறுகையில், காவிரி பிரச்னையில் நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தி, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அல்லது காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் ஆகியவற்றை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும்.
கண்காணிப்புக்குழு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது, அதற்கு எந்த அரசையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை. எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு விரைந்து அமைத்து, காவிரி பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றார்.