கூட்டத்துக்கு தலைமை வகித்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு பேசியது: காவல்துறையில் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். புதிய சிலைகள் வைக்க காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது.
மூலிகை வர்ணம் பூசப்பட்ட சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்.
பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஏதுவாக குளத்திலுள்ள ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படும்.
மதுக்கூர் பகுதிகளில் உள்ள குளங்களில் சிலைகளை கரைக்க ஏதுவாக தண்ணீர் நிரப்ப விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
விநாயகர் சிலைகளை கொண்டு செல்லும் பகுதிகளில் போதிய மின்விளக்கு வசதிகளை மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செய்ய வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக விழா கமிட்டியினர் உள்ளூரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அமைதியாக விழாவை நடத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காவல்துறையினரால் குறிப்பிட்டுள்ள வழித்தடங்களில் அமைதியாக நடைபெற வேண்டும். ஊர்வலம் செல்லும் பாதையில் விழா கமிட்டியினர் வெடி வெடிக்கக் கூடாது என்றார்.
கூட்டத்தில், பட்டுக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மேனன், இந்து முன்னணி மாவட்டச் செயலர் ராஜானந்தம், தமிழ்நாடு தெய்வீகத் தமிழ்ப்புரட்சிப் பாசறை நிறுவனர்-தலைவர் ஆதி. மதனகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.