ஊரகப் பகுதியில் உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுவுக்கு எவ்வளவு வைப்புத்தொகை செலுத்துவது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பேசியது:
உள்ளாட்சி தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் உள்ள 28 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 14 வட்டாரங்களில் உள்ள 276 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 589 ஊராட்சிகளில் தலைவர் பதவிகளுக்கும், 4,569 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில், ஊராட்சித் தலைவர் பதவிகளும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளும் கட்சி அடிப்படையில் அல்லாத தேர்தலாக நடத்தப்படும். ஆனால், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் கட்சி அடிப்படையிலான தேர்தலாக நடத்தப்படும்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் பெயர் இருக்க வேண்டும். 21 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி பதவிகள் அனைத்துக்கும் நிர்ணயிக்கப்பட்ட படிவம் 3-ல் வேட்புமனுக்கள் கொடுக்கப்பட வேண்டும்.
ஊரக உள்ளாட்சியில் வேட்புமனுக்கான வைப்புத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ. 200-ம், ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூ. 600-ம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ. 600-ம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ. 1,000-ம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.
பட்டியல் இனத்தவர்கள் பிரிவில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ. 100-ம், ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூ. 300-ம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ. 300-ம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ. 500-ம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவுரையின்படி வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு வேலை நாள்களில் பெறப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசுப் பொது விடுமுறை நாளில் வேட்புமனுக்கள் தாக்கல் மற்றும் பெறுதல் கிடையாது.
ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மாநில தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் மட்டுமே குலுக்கல் முறையில் வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) சித்ரா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கோபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.