தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி விமான நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம், கரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு நீட்டிக்கப்பட்ட பேருந்து வசதியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், மாநகராட்சி மேயர் அ.ஜெயா, விமான நிலைய இயக்குநர் குணசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பேருந்து வசதியை தொடங்கிவைத்து சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது;
தமிழக முதல்வர் போக்குவரத்துத்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய குக்கிராமங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்கள். அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
மேலும், திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்வோருக்கு ஏதுவாக விமான நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் கரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மூன்று பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன.
திருச்சி விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருகை புரிபவர்களை அழைத்து செல்லவும், வெளியில் செல்லும் நபர்களை அனுப்பி வைக்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். விமான நிலையத்திலிருந்து அழைத்து செல்ல தங்கள் ஊருக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரும் வகையில் விமான நிலையத்தோடு சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அதனை சுற்றியுள்ள நகரங்களுக்கும் இணைக்கும் வகையில் மத்திய பேருந்து நிலையம் கரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
திருச்சி விமான நிலையத்திலிருந்து காலை 4 மணிக்கு மத்திய பேருந்து நிலையம், குளித்தலை வழியாக கரூருக்கு ஒரு பேருந்தும், திருச்சி விமான நிலையத்திலிருந்து காலை 4 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருவெறும்பூர் வழியாக தஞ்சாவூருக்கு ஒரு பேருந்தும், திருச்சி விமான நிலையத்திலிருந்து காலை 10 மணிக்கு டிவிஎஸ் டோல்கேட் வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கும், விமான நிலையத்திலிருந்து மாலை 4 மணிக்கு மத்திய பேருந்து நிலையம், குளித்தலை வழியாக கரூருக்கு ஒரு பேருந்தும் என மொத்தம் மூன்று பேருந்துகள் நீட்டித்து இயக்கப்படுகிறது.
இதன் மூலம் கரூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து நேரடி பேருந்து வசதியினையும், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வெளியூர் செல்லும் அனைத்து விமான பயணிகளும் கூடுதல் பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் மணி, துணை மேலாளர் ராஜ்மோகன், துணை மேலாளர் செல்வகுமார், கோட்ட மேலாளர் வேலுச்சாமி, மண்டலக் குழுத் தலைவர் மனோகரன், மாமன்ற உறுப்பினர் விஜி, அய்யப்பன், சகாதேவபாண்டியன், திருச்சி (கிழக்கு) வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.