சேதுபாவாசத்திரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியரகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை புகார் அளித்தனர்.
மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ராவுத்தான்வயல் ஊராட்சித் தலைவர் தஸ்தகிர், மரக்காவலசை முன்னாள் ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம மக்கள் சுமார் 20 பேர் அளித்த மனு: தமிழக அரசு சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. இதற்கான பட்டியலை அந்தந்த வங்கியில் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால் சேதுபாவாசத்திரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியல் வைக்கப்படவில்லை.
இதுகுறித்து வலியுறுத்திய பின்னர் பட்டியல் வைக்கப்பட்டது. அதை பார்த்தபோது பல லட்ச ரூபாய் முறைகேடுகள் நிகழந்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மீது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டும்.