காவிரி நீர்ப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டவும், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் பேராவூரணி உட்பட மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நாளை நடைபெறுகிறது.
விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக, தேமுதிக, பாமக, தமாகா, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், மனிதநேய ஜனநாயகக் கட்சி, கொங்கு மக்கள் தேசியக் கட்சி, இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதே போல், போராட்டத்திற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாளை தமிழகம் முழுவதும் பகல் நேர ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்றும், சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், போரட்டத்திற்கு பாஜகவின் ஆதரவை கோரியுள்ளதாக விவசாயிகள் சங்கங்களின் ஒங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கர்நாடகத்தில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து நாளை புதுச்சேரியிலும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று, அங்குள்ள தமிழ் அமைப்புகளும், பொதுநல இயக்கங்களும் அறிவித்துள்ளன.