சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் தூர்ந்துபோனதால் சீராக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருபோக சாகுபடிக்கே தண்ணீரின்றி விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் கடந்த ஆண்டு பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால் சம்பா சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை. கடைமடை பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போதுமான தண்ணீர் வராததால் குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், வீரியங்கோட்டை, மரக்காவலசை போன்ற பகுதிகள் வழியாக செல்லக்கூடிய 5 மற்றும் 6ம் நம்பர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் முழுமையாக தூர்ந்துள்ளது.
இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து ஒரு போக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் முன் பாசன வாய்க்கால்களை தூர் வாரவில்லையென்றால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைப்பது எட்டாக்கனியாக இருக்கும். ஆண்டுதோறும் பாசன வாய்க்கால்கள் தூர்வார அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால் அந்த நிதி பெயரளவிற்கு மட்டும் ஒருசில வாய்க்கால்களை தூர்வாரி விட்டு மீதமுள்ள தொகையை கூறுபோடத்தான் பார்க்கிறார்களே தவிர, முழுமையாக தூர்வாருவதில் அதிகாரிகல் கவனம் செலுத்துவது கிடையாது. சம்பா சாகுபடிக்கு முன் கடைமடை பகுதி பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுபற்றி தஞ்சை மாவட்ட முன்னாள் திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் பொன்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிதான் சேதுபாவாத்திரம். முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பெரும் முயற்சியால் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் காவிரி படுகை தூர்வாரப்பட்டு கரைகள் அமைக்கப்பட்டன. இதனால் மேட்டூர் அணை திறந்தவுடன் தங்கு தடையின்றி கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரக்கூடிய சூழ்நிலையில் கவிரிப்படுகை இருந்தாலும், சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் உள்ள புதுப்பட்டினம் வாய்க்கால் குருவிக்கரம்பை - மருங்கப்பள்ளம் வழியாகவும், பூக்கொல்லை - வீரியங்கோட்டை வழியாகவும் செல்லக்கூடிய 5 மற்றும் 6ம் நம்பர் வாய்க்கால்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தூர்வாரப்படாமல் வாய்க்கால்கள் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு தூர்ந்து விட்டது. கடந்த ஆண்டு போதுமான தண்ணீர் கிடைக்காமல் சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் கஷ்டத்திற்கு ஆளாயினர். மேட்டூர் அணை விரைவில் நிரம்பி திறக்கப்பட்டால் ஒருபோகம் சம்பா சாகுபடி செய்து விடலாம் என்ற எண்ணத்தில் உள்ள கடைமடை விவசாயிகளுக்கு உடனடியாக பாசன வாய்க்கால்களை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஏரிகள் நிரம்புவதற்கு பாசன வாய்க்கால்கள் மூலம் பாசனம் தரக்கூடிய வாய்க்கால்களும். ஏரி, குளங்களிலிருந்து விவசாயத்திற்கு பாசனம் தரக்கூடிய வாய்க்கால்களையும் 100 நாள் வேலைதிட்டத்தின் மூலம் வெட்டி சீரமைக்க மாவட்ட கலெக்டர் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கூறினார்.