புதுக்கோட்டை: கீரமங்கலத்தில் நபார்டு நிதி ரூ.25 லட்சத்தில் சீரமைக்கப்பட்டதாக அரசு கணக்கில் உள்ள சாலையை காணவில்லை என்றும் அதை கண்டுபிடித்துதர கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கீரமங்கலம் பெரியார் நகர் பகுதிக்குள் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சாலையை நபார்டு வங்கி ரூ.25 லட்சம் நிதி உதவியுடன் சீரமைக்கப்படும் என்று பெயர் பலகை வைக்கப்பட்டு முதல் கட்டப் பணிகளாக மெட்டல் சாலை அமைக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு பல மாதங்களாக அந்த சாலை அதே நிலையில் உள்ளது.
தார் சாலை அமைக்கவில்லை.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட சாலை பற்றிய விபரம் அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டும் கிடைக்கவில்லை. எனவே மாவட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பொதுமக்கள் கேட்டுள்ளனர். அப்போது பெரியார் நகர் சாலை முழுமையாக சீரமைக்கப்பட்டு விட்டது என்று தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலை அறிந்த பெரியார் நகர் பொதுமக்கள் கொதிப்படைந்து அரசு கணக்கில் அமைக்கப்பட்டதாக உள்ள தார் சாலை காணவில்லை. அந்த சாலையை கண்டுபிடித்த தர வேண்டும் என்று கோரிநேற்று காலை 9.30 மணிக்கு பட்டுக்கோட்டைஅறந்தாங்கி சாலையில் சந்தைப் பேட்டை நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து சாலையை ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். அதன் பிறகு வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் கீரமங்கலம் பேரூராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் அந்த சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.