பேராவூரணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு வரை செயல்பட்டுவந்த இராமேஸ்வரம்-திருத்துறைப்பூண்டி ரயில் வழித்தடமானது, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுவருகிறது. இந்த வழித்தடத்தில் காரைக்குடி வரை அகலரயில் பாதையானது அமைக்கப்பட்டுள்ள நிலையில் பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களில் புதிய அகல பாதை ரயில்
விரிவாக்கப்பணிகள் கடந்த ஆறு வருடங்களாக நடந்துவருகிறது.
பேராவூரணியின் முக்கிய போக்குவரத்து வசதியாக இருந்த இந்த ரயில் சேவை கடந்த சில வருடங்களாக செயல்படாமல் இருப்பதால் பேராவூரணிவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பல வருடங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்றுவரும் இந்த புதிய அகலபாதை ரயில் விரிவாக்கப்பணிகள் முடிவுபெற பல வருடங்கள் ஆகும் என பேராவூரணிவாசிகளே தீர்மானித்துவிட்டனர். ஆனாலும் சில மாதங்களுக்கு முன்னர் புதிய ரயில்வே நிலையப்பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டது. இதற்கிடையில் பேராவூரணி நகரில் தண்டவாளம் பதிக்கும் பணிகளுக்கான ஆயத்த வேலைகள் தொடங்கியுள்ளது. இதனால் பேராவூரணிவாசிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதன் ஒருகட்டமாக, பேராவூரணியின் புதிய ரயில்வே நிலைய கட்டுமானத்திலிருந்து புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிகள் இரவு பகல் பாராமல் தீவிரமாக நடைபெற்றவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில், மிக விசாலமானதாக அமைக்கப்பட்டுவரும் இந்த புதிய இரயில்வே நிலையம் அழகிய கட்டுமான வடிவமைப்பில் எழிலுற கட்டப்பட்டுவருகிறது. மேலும் தண்டவாளம் அமைப்பதற்கான உள்கட்டமைப்புகளும் கட்டப்பட்டுவருகிறது. இதற்காக திருச்சி இரயில்வே கோட்டத்திலிருந்து புதிய ரயில் தண்டவாளங்கள் பேராவூரணிக்கு வந்த வண்ணம் உள்ளன. இதனால் பேராவூரணிவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விரைவில் எல்லா கட்டமானப்பணிகளும்
முடிக்கப்பட்டு விரைவில் ரயில் சேவை தொடங்கப்படவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.