தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல், நீக்குவது தொடர்பாக சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 11) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி நீங்கலாக அனைத்து தொகுதி வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் செப். 11 மற்றும் 25-ம் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இருப்பர்.
எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தொடர்புடைய வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்குதல் போன்ற கோரிக்கைகள், ஆட்சேபனைகள் இருந்தால் உரிய சான்று ஆவணங்களுடன் சென்று உரிய படிவங்களில் நிறைவு செய்து அளிக்கலாம்.
1.1.2017 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க வயது ஆதாரத்துக்காகப் பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளிச் சான்று அல்லது கடவுச்சீட்டு நகல் மற்றும் இருப்பிடச் சான்றான வங்கி-கிசான்-நடப்பு அஞ்சலக சேமிப்பு புத்தகம்
அல்லது குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரி கணக்கு அளித்தற்கான ஆவணம் அல்லது நிகழ் குடிநீர், தொலைபேசி ரசீது, மின்சார அட்டை, எரிவாயு இணைப்பு ரசீது ஆகிய முகவரி சான்று அல்லது பெற்றோர் பெயரில் முகவரிச் சான்று, வாக்காளர் படிவத்தில் அளிக்கும் முகவரிக்கு அஞ்சலகத்திலிருந்து வரப்பெற்ற கடிதம், வாடகை ஒப்பந்த பத்திரம், ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சான்றாவணத்துடன் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு சென்று படிவம் 6 பெற்று நிறைவு செய்து அங்கேயே அளிக்கலாம்.
புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6-ஐயும், வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் படிவம் 6ஏ-ஐயும் அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் பெற்று நிறைவு செய்து உரிய சான்றாவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலரிடமே செப். 30-ம் தேதிக்குள் அளிக்கலாம்.
பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ஐயும், பெயர் மற்றும் முகவரியில் மாற்றம் செய்ய படிவம் 8-ஐயும் நிறைவு செய்து அளிக்கலாம்.
தற்போது மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் மாற்றப்பட்டு, வண்ணப் புகைப்படங்களைத் தொடர்புடைய வாக்காளர்களிடமிருந்து பெற்று, வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
புகைப்படம் மாற்றம் செய்ய வேண்டியவர்களின் பட்டியல் தொடர்புடைய வட்டாட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமிருந்து படிவம் 8-ஐ பெற்று புதிய வண்ணப் புகைப்படத்தை அதில் ஒட்டி நிறைவு செய்த படிவத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கலாம்.