கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றின் பாலம் வழியாக ஞாயிற்றுக்கிழமை (செப். 25) முதல் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப் பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் பி.கே. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது:
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொள்ளிடக்கரையில் கதவணையுடன் உயர்நிலை பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த பாலத்தின் வழியாக தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வடமாவட்டங்களான கடலூர், அரியலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து நடை
பெற்றது.
இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றின் தெற்கு பகுதியில் உள்ள பாலத்தின் தூண்கள் வலுவிழந்ததால், சீரமைக்க வேண்டி கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது.
இதனால், கும்பகோணம் பகுதியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் ஜெயங்கொண்டம் வழியாகவும், மயிலாடுதுறை வழியாகவும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. அணைக்கரை பாலத்தில் ரூ. 40 லட்சத்தில் 10 தூண்கள் சீரமைக்கப்பட்டு அதற்கான பணிகள் வியாழக்கிழமை முடிவடைந்தன.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 25-ம் தேதி காலை முதல் பயணிகள் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட உள்ளது. லாரி உள்ளிட்ட கனரக வாகனப் போக்குவரத்துக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுகிறது.