பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளிலும் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தரராஜன் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இப் பணியில், கிராம சுகாதார செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவை ஈடுபட்டுள்ளன. கிராம ஊராட்சிகளில் ஒட்டு மொத்த தூய்மைப் பணிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஊராட்சிகளில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு குளோரினேசன் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்ட ஊராட்சிகளில் புகை மருந்து தெளிப்பான்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கிராமங்கள் தோறும் மருத்துவ முகாம்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள், செருவாவிடுதி, காலகம், குறிச்சி, பின்னவாசல் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தினமும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.