கயிறு மற்றும் கயிறு பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி பெற நவம்பர் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்த மையத்தில் ஆறு மாத கால கயிறு கைவினைப் பயிற்சி வகுப்பில் சேருவதற்கு 18 வயது முடிந்த 45 வயதுக்கு உள்பட்ட பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சிக்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பயிற்சியின்போது மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு விடுதி வசதி உண்டு. பயிற்சி டிசம்பர் முதல் தொடங்கப்படும்.
இப்பயிற்சியில் சேருவதற்காக விண்ணப்பப் படிவங்கள் அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.coirboard.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் வளர்ச்சி அலுவலர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்பட்டி, வல்லம் வழி, தஞ்சாவூர் 613 403 என்ற முகவரிக்கு நவ. 20-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் தகவல்கள் பெற 04362 - 264655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.