தீபாவளி பண்டிகையின்போது சென்னை மாநகரில் நெரிசலைக் குறைத்து பயணிகள் எளிதாக சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, செங்குன்றம் வழியாக ஆந்திரம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அண்ணாநகர் மேற்கு மாநகரப் போக்குவரத்துக்கழக பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.
புதுச்சேரி, காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரே உள்ள மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.
கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.
வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச்செல்லும்.மற்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.
இந்த அனைத்து தாற்காலிக பேருந்து நிலையங்களுக்கும் மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.