தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகிய இடங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் 02.10.2016 நேற்று நடைபெற்றது.
இந்த பயிற்சி கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் தெரிவித்ததாவது, உள்ளாட்சித் தேர்தல் 2016 தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரைகளின்படி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம். பெறப்பட்ட வேட்பு மனுக்கள் இன சுழற்சி ஒதுக்கீட்டின்படி உள்ள நிலையில் வேட்பு மனுக்களை சரி பார்த்து பெற வேண்டும். நாளை 3.10.2016 வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும்.
மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் பெயர், அகர வரிசையில் எடுக்கப்பட வேண்டும். ஆணையத்தால் வழங்கப்பட்ட சுயேச்சை சின்னங்களை மட்டுமே ஒதுக்க வேண்டும்.
PMK, VCK. MDMK, TMMK, LJP, SDPI ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தால் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சிற்றுராட்சி தலைவர், சிற்றுராட்சி வார்டு உறுப்பினர் வேட்பாளர்களுக்கு சின்னம், பெயர்களை குலுக்கல் முறையில் மட்டுமே தேர்ந்தெடுத்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேட்பு மனுக்களுக்குரிய தொகை பெறப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பதற்றமான மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் காவலர், வீடியோ, வெப் காமிரா உடன் கண்காணிக்கப்பட உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் எண் இடப்பட்டது சரிபார்க்கப்பட வேண்டும். வாக்காளர்களுக்கு பூத் சீலிப் 5.10.2016 க்குள் வழங்கி முடிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கட்சிக் கூட்டம், ஒலிபெருக்கி, ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
தேர்தல் விதிமுறைகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் , உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆகியோர் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்கள்.
இப்பயிற்சி கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.மந்திராசலம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிமாறன், வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், மாவட்ட நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.