பட்டுக்கோட்டை தென்னையை தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோய் மற்றும் குருத்தழுகல் நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் விளக்கமளித்துள்ளார். தென்னையை தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோயின் முதல் அறிகுறி தண்டுப்பகுதியின் அடிப்பாகத்தில் பழுப்பும், சிவப்பும் கலந்த சாறு வடியும் மற்றும் வாடல் நோய் தாக்கப்பட்ட மரத்தின் அடி மட்டைகள் பழுப்பு நிறமடைந்து காய்ந்து தொங்கும். பிறகு நாளடைவில் மரத்தின் மட்டைகள் கீழே விழுந்து மரம் மொட்டையாக மாறும்.
இதனை கட்டுப்படுத்த வறட்சி காலத்தில் அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நோய் தாக்கிய மரத்திற்கு (ஒரு மரம்) பரிந்துரைக்கப்படும் ரசாயன உரங்களுடன் 50 கிலோ தொழு உரம் மற்றும் 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து இட வேண்டும்.
வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலமும் இந்நோயின் தாக்குதலை குறைக்க முடியும். டிரைக்கோடெர்மா ஹார்சியானம் என்ற உயிர் பூசணத்தை 50 கிலோ மக்கிய தொழு எருவுடன் கலந்து மரத்தை சுற்றி 3 அடி தூரத்தில் வைத்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
பாஸ்போபாக்டீரியா என்ற நுண்ணுயிர் 200 கிராமுடன் (1 பாக்கெட்) 10 கிலோ தொழு உரம் கலந்து இடுவதன் மூலமும் இந்நோயின் பாதிப்பைக் குறைக்கலாம். ஆரியோ பஞ்சின்சால் 2 கிராம், தாமிரசல்பேட் 1 கிராம் ஆகியவற்றை 100 மில்லி தண்ணீரில் கலந்து வேர் மூலம் செலுத்த வேண்டும். வேரூட்டம் செய்ய பென்சில் அளவு தடிமனுள்ள புதிய இளஞ்சிவப்பு வேரினை கூரிய கத்தியால் சாய்வாக வெட்டி மேற்படி கரைசல் உள்ள பாலித்தீன் பையில் நுழைத்து கட்டி வைக்க வேண்டும்.
குருத்தழுகல் நோய்: இந்நோயின் அறிகுறிகள் தென்னங்கன்றுகளிலும், இளம் மரங்களிலும் மட்டுமே காணப்படும். குருத்தின் பச்சை நிறம் மாறி மஞ்சளாகி பின்னர் அழுகி வாடிவிடும். இந்நோயினை கட்டுப்படுத்த ஒரு கிலோ மயில்துத்தம் மற்றும் ஒரு கிலோ சுண்ணாம்புத் தூளை தனித்தனியே 5 லிட்டர் நீரில் கரைத்து போர்டோ பசையை தயாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குருத்துப் பகுதியில் இந்த பசையை தடவி மழைநீர் படாதவாறு பார்த்துக் கொண்டால் இந்நோய் எளிதில் கட்டுப்படும்.இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குனர் மதியரசன் தெரிவித்துள்ளார்.