பேராவூரணி புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஈஸ்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா என்னும் புதியபயிர் காப்பீட்டு திட்ட காரீப் 2016 மற்றும் ரபி 20162017 ல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயிர் கடன் பெறும் மற்றும் பயிர் கடன் பெறாத விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
உழவு செய்து நெல் விதைப்பு மேற்கொள்ள இயலாத நிலை, பயிரிட முடியாத சூழ்நிலை, விதைப்பு முதல் அறுவடை காலம் வரை உள்ள பயிர் காலத்தில் ஏற்படும் இழப்பு, அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண்அரிப்பு, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளில் ஏற்படும் இழப்பு ஆகியவற்றிற்கு பயிர் காப்பீடு வழங்கப்படும்.
இயற்கை இடர்பாடுகளினால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குதல் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கச் செய்தல், விவசாய பெருமக்களை உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலையிலிருந்து பாதுகாத்தல் ஆகியன இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
நடப்பு சம்பா பருவத்திற்கு காப்பீட்டு தொகையில் 1.5 சதம் அதாவது ஏக்கர் ஒன்றிற்கு காப்பீடு செய்யும் தொகை 25 ஆயிரத்தில் 1.5 சதம் ரூ.375 விவசாயிகள் தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்த வேண்டும். எனவே உழவுப்பணி மேற்கொண்டு விதைப்பு பணி முடித்த மற்றும் சம்பா நடவுப்பணி மேற்கொண்ட அனைத்து விவசாயிகளும் 30.11.2016க்குள் ஒரு ஏக்கருக்கு ரூ.375 செலுத்தி இத்திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.