தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவுறுத்தலின் பேரில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் குறைப்பு தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு முன்னிலை வகித்தார். இதில், பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் மா. மெல்கியு ராஜா தலைமையில் தீயணைப்பு படையினர் கலந்து கொண்டு இயற்கை இடர்பாடு காலங்களில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் குறித்து தொடர்புடைய உபகரணங்களை கொண்டு செயல்முறை விளக்கம் மூலம் செய்து காட்டினர்.
இதில் பொதுமக்கள், வருவாய் துறை அலுவலர்கள் என சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து மாலையில் பேரிடர் குறைப்பு நாள் விழிப்புணர்வு பேரணி பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு தலைமையிலும், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை ஆதிதிராவிட நல தனி வட்டாட்சியர் எல். பாஸ்கரன், வருவாய்த்துறை அலுவலர்கள் மரியஜோசப், அய்யம்பெருமாள், சுகுமார், தர்மேந்திரா, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்சிசி, என்எஸ்எஸ், ஜெஆர்சி மாணவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் அரசு ஆண்கள் பள்ளிக்குச் சென்றதும் பேரணி நிறைவடைந்தது.
பேரணியில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்ற மாணவர்கள் வழிநெடுகிலும் பேரிடர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.