திருந்திய நெல் சாகுபடி என்ற ஒற்றை நாற்று நடவு முறைக்கு நாற்றங்கால் தயார் செய்யும் முறை பற்றி சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) தயாளன் விளக்கமளித்துள்ளார்.
சம்பா சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து கடந்த 20ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அதிக மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடி முறையை கையாள வேண்டும். திருந்திய நெல் சாகுபடிக்கு 14 நாட்களில் வாளிப்பான நாற்றுகளை பெற திருத்தி அமைக்கப்பட்ட பாய் நாற்றங்கால் முறையை பயன்படுத்த வேண்டும். வடிகால் வசதியுடன் நீர் ஆதாரத்துக்கு அருகாமையில் நாற்றங்கால் அமைய வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய தேவையான 3 கிலோ விதையை 40 சதுர மீட்டர் பரப்பு (1 செண்ட்) நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.
முன்னதாக ஒரு மீட்டர் அகலமும், 40 மீட்டர் வரை நீளமும், 5 செமீ உயரமும் கொண்ட மேட்டு பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்தியின் மேல் 300 கேஜ் கனமுள்ள வெள்ளை அல்லது கருப்பு பாலித்தீன் விரிப்பு அல்லது பாலித்தீன் உர சாக்குகளை விரிக்க வேண்டும்.
நீளம் மற்றும் அகல வாக்கில் 4 கட்டங்களாக தடுக்கப்பட்டு 1 மீட்டர் நீளம், 0.5மீட்டர் அகலம், 4செமீ உயரம் கொண்ட மரத்தால் ஆன விதைப்பு சட்டம் தயார் செய்து அதனை பாலித்தீன் விரிப்பு மேல் சரியாக சமன்பட வைக்க வேண்டும். 1 கிலோ வளமான வயல் மண்ணுடன் அரை கிலோ நன்கு தூள் செய்யப்பட்ட டி.ஏ.பி உரத்தை சேர்த்து விதைப்பு சட்டத்திற்குள் முக்கால் அளவிற்கு நிரப்ப வேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட 3கிலோ முளைகட்டிய விதையை 0.5சதுர மீட்டர் சட்டத்திற்குள் 45கிராம் என்ற அளவில் விதைத்து பின் மண்ணால் நன்கு மூடிவிட வேண்டும். பின்னர் பூவாளியால் அடிவரை நனையும் அளவிற்கு தண்ணீர் தெளித்து சட்டத்தை வெளியில் எடுக்க வேண்டும்.
விதையினை விதைத்த பின் தென்னை ஓலை அல்லது வைக்கோலை கொண்டு மூடிவிட்டு 8 நாள் கழித்து அகற்றி விட வேண்டும். பின்னர் 5 நாட்கள் வரை பூவாளியால் தண்ணீர் தெளித்த பின்னர் பாத்திகள் நனையும் வகையில் தண்ணீர் கட்ட வேண்டும். சரியாக 14வது நாளில் இளம் நாற்றுகளை வேர் அறுபடாமல் எடுத்து சதுர முறையில் நடவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.