தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, பேக்கரி தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்புக்கான இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. தஞ்சை அருகே பட்டுக்கோட்டையில் இனிப்பு மற்றும் பேக்கரி தயாரிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமை வகித்து பேசும்போது, வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் பேக்கரி பெருமளவில் தயாரித்து விற்பனை செய்யப்படும். எனவே இனிப்பு, பேக்கரி தயாரிப்பு இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள இயற்கை மற்றும் செயற்கை நிறங்களை சரியான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இனிப்பு தயாரிக்க வனஸ்பதி, நெய் பயன்படுத்தினால் அது குறித்து விளம்பர பலகையில் தெளிவாக குறிப்பிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில், பட்டுக்கோட்டை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் உமாகேசன், மாதேவன், பாண்டி, சந்திரமோகன், ராஜ்குமார், கவுதமன், விஜயகுமார், கார்த்தி, ரெங்கநாதன், வடிவேல், கிருஷ்ணமூர்த்தி, மகேஷ், செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.