ரேசன் கார்டு இனி ஆன்லைன் விண்ணப்பிக்கலாம். புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்கவும், பழைய ரேஷன் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மற்றும் புகார்களை ஆன்லைன் மூலமாக தெரிவிக்கும் வகையில் தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணையத்தளம் வரும் தீபாவளி முதல் முழு பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது வேகமான சேவை மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றவற்றின் காரணமாக அரசின் பல்வேறு சேவைகள் ஆன்லைனுக்கு மாறி வரும் இக்காலத்தில் தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையானது https://tnpds.com/ என்னும் இணையதளத்தை மேம்படுத்தி வருகிறது. அதன்மூலம் புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்கவும், பழைய ரேஷன் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மற்றும் புகார்களை பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் மேற்கண்ட இணையதளத்துக்குச் சென்று “புதிய அட்டை விண்ணப்பிக்க” என்பதை தெரிவு செய்யவேண்டும். உடனடியாக திறக்கும் அடுத்த இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பாலினம், வயது, முகவரி, தொழில், மாத வருமானம் போன்ற பல்வேறு தகவல்களையும் உங்கள் ஆதார் அட்டை எண், ஏதாவதொரு குடியிருப்பு சான்று, எரிவாயு இணைப்பு குறித்த விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆவணங்களை ஸ்கேன் செய்து இரண்டு MBக்கும் குறைவான அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் மிக முக்கியமானது உங்கள் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளே ஆகும். ஏனெனில் நீங்கள் உங்களை பற்றிய விவரங்களை பதிவேற்றிய பின் ஒரு குறிப்பு எண்ணானது உங்கள் கைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். உங்கள் விண்ணப்பம் குறித்த நிலையை எதிர்காலத்தில் அறிந்து கொள்வதற்கு இந்த எண் மிகவும் அவசியமானது ஆகும்.
புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பிப்பதற்கு மட்டுமின்றி பழைய ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவை வேண்டுகோள்களையும் மற்றும் சேவை சார்ந்த புகார்களை பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் “லைவ் சாட்டிங்” வசதியும், இத்துறையின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்கள் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு. மேலும் இத்தளமானது மற்ற அரசாங்க இணையத்தளம் போன்றல்லாமல் சற்று வேகமாகவும், தெளிவாகவும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.