நிலத்தடி நீரை சேமிப்பதில் அலட்சியம் காட்டியதன் விளைவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சியில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் பகுதியில் ஆராய்ந்து அதற்கான பணிகளை பொதுப்பணித்துறை ஆய்வு செய்து மேற்
கொள்ள வேண்டும். ஆனால், கடந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்கான இடங்களை தேர்வு செய்வதில் இழுபறி, திட்ட அறிக்கை தயாரிப்பதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில்தான் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்தது. ஆனாலும், அந்த மழை நீரை தேக்கி வைக்க போதிய நடவடிக்கை பொதுப்பணித்துறை எடுக்கவில்லை.
இதன்காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் வறட்சி ஏற்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆணையம் தெரிவித்த தகவலின் பேரில் கோவை மாவட்டம், தர்மபுரி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், வேப்பூர், ஆண்டிமடம், அரியலூர், அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், செந்துரை, புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தவர்வக்கோட்டை, கரம்பக்குடி, புதுக்கோட்டை, திருவரங்குளம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், பரமக்குடி, திருப்புல்லாணி, சேலம் மாவட்டத்தில் கடையம்பட்டி, கொங்கனாபுரம், மெச்சேரி, நங்கவல்லி, நாமக்கல் மாவட்டத்தில் எலச்சி பாளையம், மல்லசமுத்திரம், புதுச்சத்திரம், சிவகங்கை மாவட்டத்தில் தேவக்கோட்டை, இளையான்குடி, காளையார் கோயில், எஸ்.புதூர், சிங்கம்புணரி, கண்ணங்குடி
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தார், ஒட்டப்பிடாரம், சாத்தான்குளம், புதூர், உடன்குடி, விளாத்திகுளம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் துறையூர், திருநெல்வேலி மாவட்டத்தில் குருவிகுளம், வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், கணியம்பாடி, ஆலங்காயம், திமிரி, விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, சாத்தூர், சிவகாசி, வேம்பக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்ட பகுதிகள் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘தமிழகத்தில் வறட்சி ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதிகள் தொடர்பான பட்டியலை மத்திய நீர்வள ஆணையம் கொடுத்துள்ளது.
அதுவும் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் எத்தனை கிலோ மீட்டர் வரை வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்பதையும் துல்லியாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த பகுதிகளில் உடனடியாக நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் தமிழக பொதுப்பணித்துறையை எச்சரித்துள்ளது. அதன்படி, தற்போது இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இப்பணி முடிவடைந்தவுடன் மத்திய அரசிடம் நிதி கேட்டு அனுப்பி வைக்கப்படுகிறது’ என்றார்.
* கடந்தாண்டு பெய்த மழையில் சுமார் 250 டிஎம்சி நீர் கடலில் கலந்து வீணானது.
* ஜனவரி முதல் ஏப்ரல் வரை மழைப்பொழிவு குறைவாக பதிவாகியுள்ளது.
* ஜ19 மாவட்டங்களில் 60 முதல் 99 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
* ஜ11 மாவட்டங்களில் மழையே பெய்யவில்லை.
* தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.