பேராவூரணி உட்பட தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள், உணவு தயாரிப்பாளர்கள் உரிமம் புதுப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ரமேஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி உட்பட அனைத்து உணவு வணிகர்கள், மளிகை கடைகள், ஸ்வீட் ஸ்டால், இறைச்சி கடைகள், விநியோகிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், உணவு பொருள்களை சேமித்து வைப்பவர்கள் மற்றும் உணவு பொருள்களை இறக்குமதி, ஏற்றுமதி செய்யும் உணவு வணிகர்கள் அனைவரும் உரிமம், பதிவுகளை எடுப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.
இந்நிலையில் உணவு உரிமம் மற்றும் பதிவுகளை புதிதாக எடுக்கவும், புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி தனியாக திருமண மண்டபங்களில் பலகாரங்கள் தயாரித்து விற்பவர்கள், பேக்கரிகள், ஸ்வீட் ஸ்டால்களில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்பவர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் உரிமம் மற்றும் பதிவு பெறாமல் உணவு பொருள்களை தயார் செய்து விற்பனை செய்ய வேண்டாம். மேலும் உரிமம் மற்றும் பதிவு பெற மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, துணை இயக்குனர், சுகாதாரப் பணிகள் வளாகம், காந்திஜி ரோடு, தஞ்சாவூர் என்ற முகவரியையோ அல்லது 04362&276511 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என டாக்டர்.ரமேஷ்பாபு கேட்டுக் கொண்டுள்ளார்.