இந்திய பாதுகாப்பு படையின் ஒரு அங்கமாக விளங்கும் இந்திய விமானப் படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே தினம்தான் தொடங்கப்பட்டது. அன்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்., 8 ஆம் நாள் விமானப்படை நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது உருவாக்கப்பட்ட இப்படை பிரிட்டனின் ராயல் விமானப்படையின் ஒரு பகுதியாக இருந்தது. தொடக்கத்தில் பிரிட்டனின் முத்திரை மற்றும் சீருடைகளையே இவர்களும் பின்பற்றினர். இப்படை விடுதலைக்கு பின்னர் இந்திய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.
இந்திய விமானப்படை 1933 ஆம் ஆண்டு நான்கு வேஸ்ட்லாண்ட் வாபிடி விமானங்கள் மற்றும் ஐந்து விமானிகளுடன் தனது முதல் படையணிப் பிரிவை தொடங்கியது. இது பிரிட்டிஷ் விமானப்படை அதிகாரி சீசல் பெளசீர் வழிகாட்டுதலில் இயங்கியது. இரண்டாம் உலகப்போரின் போது பர்மாவில் ஜப்பான் முன்னேற்றத்தை தடுக்க முக்கிய கருவியாக இந்திய விமானப்படை செயல்பட்டது. அதுமட்டும் அல்லாது அரக்கனில் உள்ள ஜப்பான் ராணுவத் தளங்கள் மீதும், வடக்கு தாய்லாந்தில் இருந்த ஜப்பான் ராணுவத் தளங்களான மே ஹாங் சன், சியாங் மை மற்றும் சியாங் ரேய் மீதும் தாக்குதல் நடத்தியது.
சுதந்திரத்திற்கு பிறகு சுதந்திர இந்தியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது. இதனால் விமானப்படையும் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து ஆயுதப்படை சட்டம் 1947, இந்திய அரசியல் அமைப்பு மற்றும் வான்படை சட்டம் 1950 ஆகியவற்றை கொண்டு இந்திய விமானப்படையின் குறிக்கோள் உருவாக்கப்பட்டது.
உலகின் நான்காவது பெரிய விமானப்படையாக கருதப்படும் இந்திய விமானப்படை சுமார் 1,70,000 வீரர்களை கொண்டுள்ளது. சுமார் 1,130 போர் விமானங்களும், 1,700 பயன்பாட்டு விமானங்களையும் உள்ளடக்கிய இப்படைக்கு இந்திய குடியரசுத் தலைவரே முதற்பெரும் தலைவர் ஆவார். இரண்டாம் உலகப்போரில் தொடங்கி சமீபத்தில் காஷ்மீர் உரி பகுதியில் இந்திய ராணுவ முகாம்கள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செப்டம்பர் 28 ஆம் தேதி நடத்தப்பட்ட ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ வரை இந்திய விமானப்படையின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளது.