தீபாவளி பண்டிகைக்கு சிவகாசியில் சூடு பிடித்தது பட்டாசு விற்பனை.

Unknown
0

சிவகாசி படடாசுக் கடைகளில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 850க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலைவாய்ப்புப் பெறுகின்றனர். தீபாவளி முடிந்த ஒரு சில வாரங்களிலேயே கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பண்டிகைக்காக பட்டாசு ஆலைகளில் உற்பத்திப் பணிகள் தீவிரமடைந்து விடும். இந்த ஆண்டும் வழக்கம்போல் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் நடைபெற்றன. மார்ச் முதல் மே மாதம் வரை பட்டாசு ஆலைப் பிரதிநிதிகள், ஏஜென்ட்கள் மாகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற வெளிமாநிலங்களுக்குச் சென்று தீபாவளி பண்டிகைக்கான ஆப் சீசன் ஆர்டர்களை புக் செய்தனர்.

பட்டாசு ஆலைகளில் ஜுலை வரை உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் 70 சதவீதம் வரை வெளி மாநில ஆர்டர்களுக்கே அனுப்பி வைக்கப்படும். இதன் பின்னர் உற்பத்தி செய்யபடும் பட்டாசுகள் கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் அதிக அளவில் அனுப்பப்படும்.
சிவகாசி பட்டாசு கடைகளில் ஆண்டுதோறும் 100 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். சிவகாசி பட்டாசுக் கடைகளில் சென்னை, கோயமுத்தூர், சேலம், மதுரை போன்ற நகரங்களைவிட 10 முதல் 15 சதவீதம் வரை விலை குறைவாகப் பட்டாசுகளை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதனால் சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருந்து பட்டாசு வாங்க வியாபாரிகள் ஏராளமானோர் சிவகாசி வருகின்றனர்.சிவகாசியில் பஸ்நிலையம், சாத்தூர் ரோடு, விருதுநகர் ரோடு, திருவில்லிபுத்தூர் ரோடு போன்ற இடங்களில் 700 க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளன.

இந்தக் கடைகளில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு தினத்தன்று விற்பனை தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு வழக்கம்போல் பட்டாசுக் கடைகளில் விற்பனை தொடங்கிவிட்டன. ஆரம்பத்தில் மந்தமாக இருந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக வெளியூர் நபர்கள் அதிகளவில் பட்டாசு வாங்க சிவகாசியில் குவிந்து வருகின்றனர். இதனால், பட்டாசுக் கடைகளில் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிவகாசியில் தீபாவளி சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இது குறித்து பட்டாசு விற்பனையாளர் மோகன் கூறுகையில், “கடந்த ஆண்டு சிவகாசியில் உள்ள பட்டாசுக் கடைகளில் விற்பனை அமோகமாக இருந்தது. கடைசி நேரத்தில் பட்டாசுகளுக்கு 10 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே தள்ளுபடி வழங்கப்பட்டது. சிவகாசியில் உள்ள பட்டாசுக் கடைகளில் வழக்கமாக செப்டம்பர் முதல் விற்னை சூடு பிடிக்க தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் முதல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பட்டாசுக் கடைகளில் விற்பனை அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top