பேராவூரணி : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசு மற்றும் தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று மாலை கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்க செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், திருவோணம், ஒரத்தநாடு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கைகளில் கறுப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர்கள் மார்க்ஸ், மதுக்கூர் நாதன், சின்னத்தம்பி, காசிநாதன், ராமசாமி, முருகையன், அதிராம்பட்டினம் நகர செயலாளர் காளிதாஸ், பட்டுக்கோட்டை ஒன்றிய விவசாய சங்க செயலாளர் கலியபெருமாள், முன்னாள் நகர செயலாளர் ரோஜா ராஜசேகர், பேராவூரணி ஒன்றிய துணை செயலாளர் ரவி, விவசாய தொழிலாளர்கள் சங்க செயலாளர் ராஜமாணிக்கம், வி.தொ.ச செயலாளர் முத்து உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.