தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றோடு முடிகிறது. இதனால் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். புது வித முறையில் சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் கடந்த வாரம் தேர்தல் தேதியை அறிவித்தது. வரும் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 26ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. இன்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் முடிகிறது.
இதுவரை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பிரச்சாரத்தை துவங்கி விட்டனர். இவர்கள் நேரிடையாக பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பதுடன் நவீன தொழில்நுட்ப சாதனங்களையும் பிரச்சாரத்திற்காக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை பட்டியலிடும் வேட்பாளர்கள் இவற்றை நிவர்த்தி செய்ய தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கோருகின்றனர். குறிப்பாக அந்தந்த வார்டுகளில் நிற்கும் வேட்பாளர்கள் அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர்கள் என்பதால் அவர்கள் பிரச்சாரம் எல்லோருக்கும் சென்றடைகிறது. மேலும் வேட்பாளர்கள் தங்கள் நண்பர்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.