உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும். வழக்கு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் ரத்துக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. தேர்தல் ஆணையத்தின் மனுவை அவசர வழக்காக விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மனு மீதான விசாரணை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இதையடுத்து பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு தரக்கோரி தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் வேட்பாளர்களுக்கு புதிய வழிமுறைகளை வகுக்கவும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும் எனவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். குற்றப்பின்னணி உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கூடாது என்று உள்ளாட்சி தேர்தலை நடத்த புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என கூறியிருந்தார். மேலும் டிசம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என உத்தரவிட்டனர். மேலும் தேர்தல் ஆணையத்தின் மனு மீதான விசாரணை 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.