தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக லேசான குளிர் தொடங்கிவிட்ட நிலையில் மழை என்பது குறைவாகவே உள்ளது. எனினும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இதனை தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், சில தினங்களாக வலு குறைந்திருந்த வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தை ஒட்டிய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருவதாகவும், இதனால் மழை பொழிய வாய்ப்பிருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
குமரி, நெல்லை, ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் அடுத்த 2 நாட்களில் மிதமான மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையை பொருத்தவரை ஓரிரு முறை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நன்னிலத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.