நாடு முழுவதும் இரு நாட்களுக்குப் பிறகு ஏடிஎம் மையங்கள் (11-ம் தேதி) இயல்பாக இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பரவலாக அவ்வாறு இயங்கவில்லை.
பெரும்பாலான ஏடிஎம்-கள் இயங்காததால் மக்கள் பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர். அன்றாட அத்தியாவசியச் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் சாமானிய மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏடிஎம்கள் இயங்க ஏன் தாமதமாகிறது என்பதை விளக்குகிறார் ஏடிஎம் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர்.
இதுகுறித்து இந்தியா மற்றும் தெற்காசியாவில் இயங்கும் என்.சி.ஆர். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி நவ்ரோஸ் தஸ்தூர் கூறும்போது, ''அனைத்து ஏடிஎம் கேசட்டுகளும் (கேசட்- பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிடும் வகையில் ஏடிஎம்மினுள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள்) தானியங்கி இயந்திரங்கள் கிடையாது. அவை பணியாளர்களைக் கொண்டே நிரப்பப்படுகின்றன. பணியாளர்கள்தான் 100 ரூபாய் நோட்டுகளையும், ரூ. 500, ரூ. 2000 நோட்டுகளையும் நிரப்ப வேண்டும். அவ்வாறு அவர்கள் புதிய நோட்டுகளை நிரப்ப போதிய அவகாசம் தேவைப்படும்.
பொதுவாக இந்தியாவில் உள்ள ஏடிஎம்கள், நான்கு வெவ்வேறு வித நோட்டுகளைக் கொடுப்பதற்காக நான்கு கேசட்டுகளைக் கொண்டிருக்கின்றன. தற்போது வரை பெரும்பாலான ஏடிஎம்கள் இரண்டு கேசட்டுகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்றில் 100 ரூபாய் நோட்டுகளும், மற்றொன்றில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளும் நிரப்பப்படுவது வழக்கம். இப்போதும் அந்த முறையே வழக்கத்தில் இருப்பதால் பணியாளர்களைக் கொண்டே அவற்றை மாற்ற முடியும்.
அதனால் நாங்கள் நாட்டில் உள்ள அனைத்து ஏடிஎம்களுக்கும் ஆட்களை அனுப்பி, தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதனாலேயே ஏடிஎம்கள் அனைத்தும் இயங்கத் தாமதமாகிறது'' என்றார்.