அந்தமான் அருகே உருவான காற்று சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அந்தமான் அருகே நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பாபநாசம், தூத்துக்குடி, தென்காசி, ஆர்.எஸ்.மங்கலம், கரூர், சிவகிரி, செங்கோட்டை, பரங்கிப்பேட்டை, பாம்பன், காஞ்சிபுரம், திருவிடைமருதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்துள்ளது.
இந்நிலையில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
மேலும், வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி காரணமாகவும் இலங்கை அருகே காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. அது வட மேற்கு திசையில் நகர்வதால் தெற்கு கேரளா, லட்சத்தீவு, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.