சம்பா தாளடி பயிர்களுக்கு உரமிடும் வழிமுறைகள் குறித்து பட்டுக்கோட்டை அடுத்த திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இயற்கை உரம் கடைசி உழவிற்கு முன் ஒரு ஏக்கருக்கு 5 டன். தொழுஉரம் (அல்லது) கம்போஸ்ட் உரம் (அல்லது) 2 1/2 டன் பசுந்தழை உரம் இட வேண்டும்.
பசுந்தழை உரம் மக்குவதற்கு குறைந்தது ஒருவார கால இடைவெளி விடவேண்டும். ரசாயன உரம். சம்பாதாளடி நடவுக்கு பயன்படுத்தப்படும் மத்திய கால நெல் ரகங்களுக்கு மொத்த உர பரிந்துரையாக ஒரு ஏக்கருக்கு யூரியா 132 கிலோவும், சூப்பர் பாஸ்பேட் 150 கிலோவும், பொட்டாஷ் 40 கிலோவும் பயன்படுத்த வேண்டும்.
இந்த மொத்த உர பரிந்துரை அளவில் அடியுரமாக யூரியா 53 கிலோவும், சூப்பர் பாஸ்பேட் 150 கிலோவினை முழுமையாகவும், பொட்டாஷ் உரம்20 கிலோவும் அடியுரமாக இடவேண்டும். பின்னர் நடவு செய்த 20ம் நாள் ஒரு ஏக்கருக்கு 26 கிலோ யூரியா மட்டும் மேலுரமாக இட வேண்டும்.
பின் நடவு செய்த 40ம் நாள் 26 கிலோ யூரியாவும், 20 கிலோ பொட்டாஷ் உரமும் கலந்து மேலுரமாக இடவேண்டும்.
பின்னர் நடவு செய்த 60வது நாள் யூரியா மட்டும் 26 கிலோ மேலுரமாக இட வேண்டும். யூரியாவை மேலுரமாக இடும் ஒவ்வோரு முறையும் யூரியா, ஜிப்ஸம், வேப்பம் புண்ணாக்கு ஆகியனவற்றை 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்னர் வயலில் இட வேண்டும். இதனால் யூரியா நீரில் கரைந்து விரையமாவது தடுக்கப்பட்டு அதன் முழு பலனும் பயிருக்கு கிடைக்க வழி கிடைக்கிறது.
நுண்ணுயிர் உரம். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் பொட்டலங்கள் தலா 4 பாக்கெட்டுகள் வீதம் 25 கிலோ நன்கு தூள் செய்த தொழு எருவுடன் கலந்து நடவுக்கு முன் ஒரு ஏக்கர் பரப்பில் தூவ வேண்டும். இந்நுண்ணுயிர் பொட்டலங்களை வயலில் இடுவதால் தழைச்சத்தைக் கொடுக்கும் யூரியா அளவினை 25 சதம் வரை குறைத்துக் கொள்ளலாம். பாசி வகையைச் சேர்ந்த அசோலா நுண்ணுயிர் தாவரம் ஏக்கருக்கு 400 கிலோ வீதம் நடவு செய்த 710 நாட்களில் இட வேண்டும். முதல் கைக்களை எடுக்கும் சமயம் அசோலாவை சேற்றில் மிதித்து விட வேண்டும்.
நுண்ணூட்ட உரம். நெற்பயிருக்கு இட வேண்டிய மிக முக்கியமான நுண்ணூட்ட உரம் சிங் சல்பேட் ஆகும். இதனை நாற்றங்காலில் இடும்போது சென்டுக்கு 100 கிராம் வீதம் இட வேண்டும். அவ்வாறு நாற்றங்காலில் இடமுடியாத பட்சத்தில் நடவு வயலில் அடியுரமாக நடவுக்கு முன் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ சிங்சல்பேட் நுண்ணூட்டத்தினை 20 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும். அடியுரமாக இடமுடியாத போது முதல் மேலுரம் இடும் சமயம் ஏக்கருக்கு 10 கிலோ வீதம் சிங்சல்பேட் இடலாம். நுண்சத்து உரம்.
நுண்சத்து உரமான ஜிப்ஸம் ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 100 கிலோ மற்றும் முதல் மேலுரம் இடும்போது 100 கிலோவும் இடவேண்டும். இலைவழி உரம். 2 சத டி.ஏ.பி கரைசலை சூல்கட்டும் பருவம் மற்றும் தொண்டை கதிர் பருவங்களில் இருமுறை தெளிக்க வேண்டும்.
4 கிலோ டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே ஊறவைத்து மறுநாள் வடிகட்டி, வடிகட்டிய நீரில் 2 கிலோ யூரியா மற்றும் 2 கிலோ பொட்டாஷ் உரங்களை கரைத்து 190 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கர் நெற்பயிரில் மாலை வேளையில் தெளிக்க வேண்டும். மேற்கண்ட வழிகளில் ஒருங்கிணைந்து நெற்பயிருக்கு உரச் சத்துக்களை அளிக்கும் போது அதிக மகசூல் பெற்று நிறைந்த வருமானத்தை பெற முடியும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி : தினகரன்