500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், வங்கிகளில் டிசம்பர் 30-ம் தேதிக்குள் டெபாசிட் செய்து வரவு வைத்துக்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் மட்டும் 11ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நோட்டுக்கள் 10-ம் தேதி புழக்கதிற்கு வருகிறது. இந்த நடைமுறைகள் அமலுக்கு வருவதையொட்டி, நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 9, 10) ஏ.டி.எம். மையங்கள் செயல்படாது. வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ன.
இந்த முடிவு யாருக்கும் தெரியாது என்றும், இது மிகவும் சாதகமான நடவடிக்கை என்று பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் புதிய எண்களுடன் கூடிய 10, 20, 100 மற்றும் 1000 நோட்டுக்கள் கூடுதலாக அச்சிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினால் பொதுமக்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்கள் நாளை காலையில் அத்யாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். சிறிய பெட்டிக்கடை, பால் கடை முதல் பலகாரக் கடை வரையில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதை தவிர்ப்பார்கள். எனவே, 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக பொதுமக்கள் ஏடிஎம் மையங்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர். இதனால், ஏடிஎம் மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அதன் அடிப்படையில் பேராவூரணி எ டி எம் மையங்களில் மக்கள் அலைமோதியபடி உள்ளனர்.