69 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சூப்பர் நிலவு வானில் தோன்றியது. இதனை சென்னை மெரினாவிலும், கன்னியாகுமரியிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நீள்வட்டச் சுற்றுப்பாதையில் வரும் நிலா நேற்று சுமார் 50 ஆயிரம் கிலோ மீட்டர் நெருங்கி வந்ததால், பிரமாண்டமாக காட்சியளித்தது. இந்த சூப்பர் நிலவை சென்னை மெரினாவிலும், கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர். கன்னியாகுமரி வள்ளுவர் சிலைக்கு அருகே முழு நிலவு பிரகாசித்த காட்சி, மக்கள் மனதை கொள்ளை கொண்டது. அதன் முன்னால் நின்று கொண்டு ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சென்னை உட்பட தமிழகத்தின் எல்லா இடங்களிலில் இருந்தும் மக்கள் வெறும் கண்களாலேயே இதை பார்த்து ரசித்தனர். தமிழகம் மட்டுமின்றி டெல்லி மக்களும் வானில் தோன்றிய சூப்பர் நிலவை கண்டு ரசித்தனர்.
இதற்கு முன்பு கடந்த 1948-ம் ஆண்டு இதேபோன்று ‘சூப்பர் நிலவு’ தோன்றியுள்ளது. இனிமேல், 2034-ம் ஆண்டு நவம்பர் 25 ம் தேதி மீண்டும் இதுபோன்ற ‘சூப்பர் நிலவு’ தோன்றும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.