மத்திய அரசு அறிவித்துள்ளபடி 500 ரூபாய் பயன்பாடு இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. கருப்புப் பண ஒழிப்பு மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தைத் தடுக்க பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரையிலான காலக்கெடுவுக்குள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள், அரசு சேவைகள் என சில அத்தியாவசியத் தேவைகளுக்கான கட்டணங்களுக்காக பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது காஸ் சிலிண்டர், அரசு வரி கட்டுதல், சுங்கச் சாவடிகளில் 500 ரூபாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ளபடி மேற்கூறிய இடங்களிலும் பழைய 500 ரூபாய் ஏற்புக்கான காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால், டிசம்பர் 30-ம் தேதி வரை பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செய்துகொள்ளலாம்.