பேராவூரணியை சேர்ந்தவர் பாவலர் திருக்குறள் மு.தங்கவேலனார். (வயது 70). பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகில் தேநீர் கடை நடத்தி வருகிறார். திருக்குறள் மீது கொண்ட பற்றினாலும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தியும் பல ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கி வருகிறார். இவ்வாண்டும் ஞாயிற்றுக்கிழமை திருவள்ளுவர் தினத்தன்று ஐயாயிரத்திற்கும் அதிகமானோருக்கு ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கினார்.
பள்ளி சென்று படித்திராத இந்த மேதை அனுபவ அறிவின் மூலம் ஏராளமான நூல்களை படித்து தன் அறிவை மெருகேற்றிக் கொண்டவர்.
இவரது தேநீர் கடையிலேயே ஏராளமான நூல்கள் கொண்ட நூலகம் உள்ளது. தினமும் காலை ஒருமணி நேரம் மாணவர்களுக்கு திருக்குறள் பற்றிய வகுப்புக்களை எடுத்து அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார். பள்ளி சிறுவர்கள் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை இவரது கடையில் எந்நேரமும் கூடி திருக்குறள் பற்றி விவாதிப்பது வழக்கம். திருக்குறள் பற்றிய தேடலில் உள்ளவர்களுக்கு இவரது தேநீர் கடை ஒரு வேடந்தாங்கல் என்றே சொல்லலாம்.
இவரது கடை வாசலில் அமைக்கப்பட்டுள்ள கரும்பலகையில், தினமும் ஒரு திருக்குறளை எழுதி அதன் பொருள் விளக்கம் எழுதிப் போடுவது வழக்கம். அதில் எந்த அதிகாரம் எத்தனையாவது குறள் என தெளிவாக குறிப்பிடுகிறார். இவ்வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் என சகலரும் நின்று திருக்குறளை வாசித்துச் செல்வதுண்டு.
ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் திருக்குறள் தங்கவேலனாரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கியுள்ளது குறிப்பிடக்தக்கது.
இப்பகுதி மக்கள் இவரை திருக்குறள் தாத்தா என்றும் இவரது கடையை திருக்குறள் தேநீர் கடை என்றே அழைக்கிறார்கள். பள்ளி சென்று முறையாக படித்திடாத பாவலர் தங்கவேலனார் பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும், நடுவராகவும் கலக்கி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
திருவள்ளுவர் தினத்தன்று நகரில் பெரும்பாலான தேநீர் கடைகள், உணவகங்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கூட சளைக்காமல் காலை முதல் இரவு வரை வாடிக்கையாளர்களுக்கு பாவலர் தங்கவேலனார் தேநீர் வழங்கினார்.
திருக்குறளை பரப்புவதிலும், திருக்குறள் நெறிப்படி வாழ்வதிலும் ஈடுபாடு காட்டிவரும் பாவலர் தங்கவேலனாரிடம் கேட்டபோது, " பல ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கி வருகிறேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். இந்துக்களுக்கு பகவத் கீதை, இஸ்லாமியர்களுக்கு திருக்குர்ஆன், கிறிஸ்தவர்களுக்கு பைபிள் புனிதநூலாக உள்ளது. ஆனால் அனைத்து மக்களுக்கும் பொதுவான புனிதநூலாக போற்றத்தக்கது திருக்குறள். திருக்குறள் நம்மையும், சமூகத்தையும் வாழ்விக்கும் அருமருந்து. அதை நாம் நன்கு கற்றுணர்ந்து சமூகத்தை உய்விக்க வேண்டும்.
இன்றைக்கு ஜல்லிக்காட்டுக்காக இணைந்து குரல் கொடுக்கும் மாணவர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப துறையினர் ஆகியோரின் கருத்துக்களை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் காளைகள் உள்ளிட்ட கால்நடைகளை தங்கள் குழந்தைகளைப் போல நேசிக்கும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, வறட்சி, புயல், மழை வெள்ளம் என இயற்கை சீற்றங்களோடு போராடி வருகின்றனர். வறட்சியினால் பாதிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விளைநிலங்கள் மனைக்கட்டுகளாக மாறி வருகின்றன. நீர்நிலைகள் கொஞ்சம்கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. விவசாயம் இன்றைக்கு காட்சிப் பொருளாக மாறி வருகிறது. விவசாயி காக்கப்பட வேண்டும்.
இன்று ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்குவதால் சில ஆயிரம் நட்டம் ஏற்படலாம். ஆனால் திருக்குறளை உலகிற்கு தந்த ஒப்பற்ற வள்ளுவன் பிறந்த தினத்தன்று என்னால் முடிந்த சேவையாகவே நினைக்கிறேன்.
திருக்குறள் சம்பந்தமான எந்த ஒரு விஷயம் குறித்தும் தெரிந்து கொள்ள இரவு பனிரெண்டு மணி என்றாலும் நான் தயார் என சொல்லும் தங்கவேலனாருக்கு சுவாசமே திருக்குறள் என்றால் மிகையில்லை. இந்த வயதிலும் இளைஞரைப் போல செயல்படும் தங்கவேலனார் பேராவூரணி திருக்குறள் பேரவையிலும் தன்னை இணைத்துக் கொண்டு தலைவராக
செயலாற்றி வருகிறார்.
திருக்குறள் தங்கவேலனாரின் மனைவி மேனகா. குடும்ப தலைவியான இவர் கணவரின் ஆர்வத்திற்கு அணை போடாமல் அவருக்கு ஆதரவான பின்புலமாக இருக்கிறார். மகன் அகிலன் ஒலி பெருக்கி, அலங்கார மேடை அமைத்தல் தொழில் செய்து வருகிறார். மகள் ஜெயசித்ரா திருச்சியில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்குமே திருமணமாகி விட்டது.
நன்றி : அதிரை நியூஸ்
நன்றி : அதிரை நியூஸ்