பேராவூரணி அடுத்த புனல்வாசல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்த கிராம கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து விழா நடத்துவது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் விழா கமிட்டியினர் முறைப்படி விண்ணப்பித்தனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு விழாவை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள புனல்வாசல் முத்துமாரியம்மன் கோவில் வளாக இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியருடன் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ், பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்மேனன், ஏ.டி.எஸ்.பி கண்ணன், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ், தாசில்தார் ரவிச்சந்திரன், பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சௌந்தரராஜன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் இடத்தை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ள தேதியை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து விரைவில் அறிவிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி:தீக்கதிர்