பேராவூரணி பேரூராட்சியில் பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
தனியார் நிலங்களில் உள்ள மரங்களை இடத்தின் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் பேரூராட்சி மூலம் அகற்றப்பட்டு கட்டணம் மற்றும் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதிகளில் நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களை கொண்டு மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் தளபதி கூறியதாவது: பேராவூரணி பெரியகுளத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் சீமை கருவேல மரங்களை எங்களது பள்ளி நிர்வாகம் சார்பில் அகற்றியுள்ளோம். அரசை மட்டும் எதிர்பார்க்காமல் பொதுமக்கள், தன்னார்வ தொண்டர்கள் தாமாக முன்வந்து சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.கடந்த காலங்களில் நெய்வேலி காட்டாமணக்கு, பார்த்தீனியம் செடி ஒழிப்புபோல் கண்துடைப்பாக இல்லாமல் உண்மையாக இருக்க வேண்டும். சீமை கருவேல மரங்களின் தீமை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.எனவே பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இளைஞர் மாணவர் சக்தியை அரசு பயன்படுத்த வேண்டும் என்றார்.
நன்றி : தினகரன்