தமிழக அரசியலில் அண்மை காலங்களில் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வுகள், தமிழகத்தின் மிக முக்கிய பிரச்னைகளை மறக்கடிக்கச் செய்துள்ளது. கடும் வறட்சியில் தமிழகம் சிக்கியிருப்பதை, விவசாயிகள் மரணித்து போனதை, தண்ணீருக்காக மக்கள் தவித்து வருவதை... சட்டத்தை மீறி கேரளா அணை கட்டி வருவதை... இப்படி பல முக்கிய பிரச்னைகளை நாம் மறந்து விட்டோம். அல்லது மறக்கடிக்கப்பட்டுள்ளோம்.
இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் தான். வறட்சியில் துவங்கி கேரளா அணை கட்டுவது வரை எல்லாம் விவசாயிகளை பாதிக்கும் பிரச்னைகள் தான். இதை எதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயம் பொய்த்து போனதால் இறந்த விவசாயிகளை கூட அரசு கண்டுகொள்ளவில்லை. மறுபுறம் அரசியல் நிகழ்வுகளிலும், அதிகாரத்தை கைப்பற்றுவதிலும் தான் அரசும், மக்கள் பிரதிநிதிகளும் செயல்பட்டனர்.
இந்நிலையில், இன்னுமொரு பிரச்னையில் சிக்கி இருக்கிறார்கள் விவசாயிகள். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க... இத்திட்டம் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் எனச்சொல்லி போராடத்துவங்கி இருக்கிறார்கள் விவசாயிகள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ளது நெடுவாசல். தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள இந்த பகுதி நல்ல மண்வளம் நிறைந்த பகுதியாகும். நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்களுக்கும் ஏற்ற நிலமாக உள்ளது. கடந்த ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இப்பகுதியல் எரிவாயு சோதனைக்காக இரண்டு விவசாயிகளின் நிலத்தை கையகப் படுத்தி சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்தது. அப்போது கிராம மக்கள் திரண்டு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எரிவாயு சோதனை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்காக மேலும் சிலரின் இடங்களைகையகப்படுத்த முயன்றபோதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து சம்மதிக்க மறுத்தனர். இந்நிலையில் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில்இயற்கை எரிவாயு எடுப்பதற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நெடுவாசல் பகுதி விவசாயிகளிடம் எவ்வித கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமலும், திட்டம் குறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமலும் மத்திய அமைச்சரவை இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் போன்ற போராட்டங்களை முன்னெடுக்கத்துவங்கி இருக்கிறார்கள். இந்த திட்டத்தை அனுமதிக்க கூடாது என நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்தனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் கையெழுத்துப் பெற்று அந்த மனுவை மாவட்ட ஆட்சியரிம் வழங்கினர்.
இது தொடர்பாக விவசாயிகளிடம் பேசிய போது, "இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மண்வளம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்து வேளாண் தொழில் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பியுள்ள தங்கள் பகுதியைசேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரும்பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், விவசாயிகளை திரட்டி விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்," என்றனர்.