புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கும். எனவே அதனை செயல்படுத்தக் கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வருகிற 26-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக உரிமை மீட்புக் குழுவினர் அறிவித்துள்ளனர். இதனிடையே சட்டக்கல்லூரி மாணவர்கள் கேட்டு கொண்டதன் பேரில் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று காலை கல்லூரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும் போது, புதுக்கோட்டை நெடுவாசலில் செயல்படுத்த போவதாக அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். திட்டத்தை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இதற்காக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட மாணவர்கள், அமைப்புகளை ஒன்று திரட்டி வருகிறோம் என்றனர்.
நேற்று நெடுவாசல் வருவாய்த்துறை அதிகாரிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பகுதிகளை பார்வையிட சென்றபோது அவர்களை அதிகாரிகள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.