தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிக வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. வெயிலுக்கான முன்எச்சரிக்கைக்கான கடிதம் ஒன்று கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் இயக்குனர் ஜி.லதா சுற்றிக்கை அனுப்பி உள்ளார். மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப அலை வீசும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அனுப்பியுள்ளது. நாளை வீசக்கூடும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதால் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை பகல் 12 மணி முதல் மாலை 3 மணி முதல் யாரும் வெளியில் வரவேண்டாம் எனவும், பள்ளிகளில் திறந்த வெளியில் வகுப்புகள் நடத்த வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.