உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடக்கும். தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான ஓலைச்சப்பரத்தில் சுவாமிகள் புறப்பாடு 13ம் நாள் திருவிழாவின் போதும், 15ம் நாள் திருவிழாவில் தேரோட்டமும் நடக்கும். இதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் சுவாமிகள் கோயிலுக்குள் புறப்பாடு ஆகி அதன்பின்னர் கொடியேற்றம் நடக்கிறது.
22ம் தேதி காலை பல்லக்கு புறப்பாடும், மாலை சிம்ம வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. 23ம் தேதி மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் சுவாமிகள் புறப்பாடும், 24ம் தேதி மாலை மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் சுவாமிகள் புறப்பாடும், 25ம் தேதி மாலை வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. 26ம் தேதி காலை சுப்பிரமணியர் சுவாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், மாலை சைவ சமயாச்சாரியர் நால்வர் புறப்பாடும் நடக்கிறது.
27ம் தேதி காலை நால்வர் பல்லக்கில் கோயிலுக்குள் புறப்பாடும், தொடர்ந்து சுவாமி சந்திரசேகரர் பட்டமும் நடக்கிறது. மாலை சூரிய பிரமையில் சுவாமிகள் புறப்பாடு நடக்கிறது. 28ம் தேதி மாலை சந்திர பிரமையில் சுவாமிகள் புறப்பாடு நடக்கிறது. 29ம் தேதி மாலை கோயில் வசந்த மண்டபத்தில் சுவாமிகள் பிரவேசம், செங்கோல் வைபவம் புறப்பாடு நடக்கிறது. 30ம் தேதி மாலை சுவாமிகள் முத்துப்பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. 1ம் தேதி மாலை பூதவாகனத்தில் சுவாமிகள் புறப்பாடு நடக்கிறது.
2ம் தேதி வெள்ளியானை வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடும், 3ம் தேதி மாலை வெள்ளி யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. அன்றைய தினம் ஓலைச்சப்பரத்தில் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடக்கிறது. 4ம் தேதி மாலை சுவாமிகள் கைலாச பர்வத வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. 5ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது.
காலை 5.30 மணிக்கு விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுடன் தியாகராஜர், கமலாம்பாள் சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு தேர் இருக்கும் இடைத்தை அடைகின்றனர். அங்கிருந்து காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. 4 ராஜ வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. 6ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 7ம் தேதி காலை தியாகராஜர் சுவாமிகள் பந்தற் காட்சியுடன் யதாஸ்தான பிரவேசம் நடக்கிறது. மாலை நடராஜர் சுவாமிகள் வெள்ளை சாத்தி புறப்பாடு நடக்கிறது.
8ம் தேதி காலை நடராஜர் சுவாமிகள் 4 ராஜ வீதிகளில் புறப்பாடும், தியாகராஜர் சுவாமிகள் ருத்திரபாத தரிசனத்துடன் யதாஸ்தான பிரவேசம் நடக்கிறது. பின்னர் கோயிலுக்குள் உலா வந்து தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி 18ம் நாள் திருவிழாவின் போது கொடியிறக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை பல்லக்கில் சுவாமிகள் புறப்பாடும், மாலை சின்னமேளம் நிகழ்ச்சியும், மாலை சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் செய்துள்ளது.