மீன் இனபெருக்க காலத்தையொட்டி, விசைபடகிற்கு மீன்பிடி தடை காலம் என்பதால் தஞ்சை மாவட்டத்தில் மீன் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. மீன் இனபெருக்ககாலம் என அரசு விசைபடகிற்கு ஏப்ரல் 15 முதல் மே 29ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடைவிதித்துள்ளது. இதனால் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 300 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மீன் பிடிதுறைமுகங்களிலிருந்து மீன் வியாபாரிகள் அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற பல்வேறு நகரங்களுக்கு சென்று வாங்கி விற்பனை செய்து வந்தனர். தற்போது விசைப்படகிற்கு தடைவிதித்திருப்பதால் நாட்டுபடகுகள் மட்டும் ஆழ்கடலைத் தவிர்த்து கரை ஓரங்களில் மீன் பிடித் தொழில் செய்து வருகிறது. இப்படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களை வெளியூர் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்கிசென்று விடுகின்றனர். இதனால் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கட்டுமாவடி போன்ற பகுதிகளில் உள்ள ஏலக்கடைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. மேலும் கிராமபுறங்களில் உள்ள மீன் மார்கெட்டுகளுக்கு குறைந்த அளவு மீன் விற்பனைக்கு வருவதால் 1 கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட காளை மீன் 600 முதல் 750 ரூபாய் வரை விற்கிறது. ரூ.250க்கு விற்கப்பட்ட வாவல் மீன் ரூ.600 வரை விற்கிறது. ரூ.150க்கு விற்கப்பட்ட பொடி மீன் 450 ரூபாய் வரை விற்கிறது. ரூ.300 ரூபாய்க்கு விற்கப்பட்ட இரால் 650 முதல் 700 ரூபாய் வரை விற்கிறது. அது மட்டுமின்றி கருவாடு விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. மீன் விலை பல மடங்கு உயர்ந்தாலும் மார்கெட்டுகளுக்கு மீன் வருவாய் குறைவாக உள்ளதால் பொதுமக்களுக்கு உணவிற்கே மீன் தட்டுப்பாடாக உள்ளது.
நன்றி : தினகரன்